திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் சிலருக்கு, அவர்களது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வராததால் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்றை தடுக்கும் வகையில், பொதுமக்கள் தற்போது ஆர்வமுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். இவ்வாறு தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு, அவர்களது மொபைல் எண்ணுக்கு, தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான குறுந்தகவல் வரவில்லை. இதனால், அவர்களால் அதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியது: கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் வரும். அந்தத் தகவலில் பயானாளர் குறியீட்டுஎண் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த எண்ணைப்பயன்படுத்தித்தான் கோவின் செயலி மூலம் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழைபதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால், குறுந்தகவல் வராததால் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சிலர் முதல் தவணை தடுப்பூசியை திருவள்ளூரில் போட்டுவிட்டு, 2-வது தவணையை வெளியூர்களுக்குச் செல்லும்போது போடுகின்றனர். ஆனால், முதல் தவணை தடுப்பூசி போட்டதற்கான குறுந்தகவல்கள் அவர்களுக்கு வராததால், அதைக் காண்பித்து 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியவில்லை.
அத்துடன், மத்திய, மாநில அரசுகள் வரும் நாட்களில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் அதற்கான அத்தாட்சியாக சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டால், அது எங்களுக்கு பெரும் பிரச்சினையாகி விடும். எனவே, கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு அதற்கான தகவலை அவர்களது செல்போன் எண்ணுக்கு வருவதை அதிகாரிகள் உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago