செங்கல்பட்டு மாவட்டத்தில் தொற்று பரவலை தடுக்க - தினமும் 6,000 பேருக்கு கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை : திருவள்ளூர் மாவட்டத்தில் 170 தடுப்பூசி முகாம்கள்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் தினமும் 6 ஆயிரம் பேருக்கு கரோனாதடுப்பூசி போட நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது என்று செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம், சிறுசேரியில் தொழிற்பூங்கா (சிப்காட்), தாம்பரம் போக்குவரத்து பணிமனை உள்ளிட்ட இடங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம்நேற்று நடைபெற்றது. இந்த முகாமை ஆய்வு செய்த பின்மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் போக்குவரத்து துறை செயலருமான சமயமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளதால் தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது. இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 145 தடுப்பு ஊசி போடும் மையங்கள் உள்ளன. தற்போது 7 முதல் 8 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

தொழிற்சாலைகள், போக்குவரத்து பணிமனைகள், அதிக மக்கள் தொகை கொண்ட அபார்ட்மென்ட்கள், கல்வி நிறுவனங்களை நேரடியாக அணுகி 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் முதற்கட்டதடுப்பூசி ஒரு லட்சத்து 20 ஆயிரம்பேருக்கும், 2-ம் கட்ட தடுப்பூசி 20 ஆயிரம் பேருக்கும் போடப்பட்டுள்ளது என்றனர்.

இதைத் தொடர்ந்து தாம்பரம் பணிமனை, பேருந்து நிலையம், பல்லாவரம் பெருநகராட்சியில் தடை செய்யப்பட்ட இடம், பெரும்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சிறுசேரி தொழிற்பேட்டை வளாகம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் பிரியாராஜ், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாட்டத்தில் திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் 2 இடங்களில் நடந்த முகாமில்80-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரியும் 400-க்கும் மேற்பட்டோருக்கும், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 6 இடங்களில் நடந்த முகாமில் 140-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

இந்த முகாம்களை ஆய்வு செய்தமாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நகராட்சிகளின் நிர்வாக ஆணையருமான பாஸ்கரன், செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருவள்ளூர் மாவட்டத்தில்தினமும் 170 முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதுவரை 15,524 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். 1,28,724 முன்களப் பணியாளர்கள், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து, பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இதில், ஆட்சியர் (பொறுப்பு) முத்துசாமி, சுகாதாரப் பணிகள் துணைஇயக்குநர்கள் பிரபாகரன், ஜவஹர்லால் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்