கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளின் செயல்திறன் ஒரே அளவிலானது: ஆட்சியர் :

By செய்திப்பிரிவு

கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளின் செயல் திறன் மற்றும் அதனால் கிடைக்கும் எதிர்ப்பு சக்தியும் ஒரே அளவிலானது என புதுக்கோட்டை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி போடும் பணியை நேற்று முன்தினம் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 12,000 பேரில் 96 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட 323 பேரில் 157 பேர் புதுக்கோட்டையிலுள்ள மருத்துவமனைகளிலும், 123 பேர் வெளி மாவட்ட மருத்துவமனைகளிலும், 43 பேர் வீட்டுத் தனிமைப்படுத்துதலிலும் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் நாளொன்றுக்கு 70-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு தினமும் 1,500 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் செயல் திறனும், அதனால் கிடைக்கும் எதிர்ப்பு சக்தியும் ஒரே அளவிலானது. இவற்றால் எவ்விதமான பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை. எனவே, தகுதியுள்ள அனைவரும் இந்த 2 தடுப்பூசிகளில் ஒன்றை தயக்கமின்றி போட்டுக்கொள்ளலாம். மாவட்டத்தில் தேவையான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்றார்.

இந்த ஆய்வில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி, மாவட்ட சுகாதார இணை இயக்குநர் ராமு, நகராட்சி பொறியாளர் ஜெ.சுப்பிரமணியன், பொது சுகாதார துணை இயக்குநர்கள் கலைவாணி, விஜயகுமார், கோட்டாட்சியர் டெய்சிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்