கரூர் தொகுதியில் அதிக வேட்பாளர்கள் உள்ளதால், வாக்கு எண்ணும் அறைகளின் எண்ணிக் கையை அதிகரிக்க வேண்டும் என ஆட்சியரிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சார்பில் முதன்மை முகவர் வழக்கறிஞர் மாரப்பன், அதிமுக மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் உள்ளிட்ட அதிமுகவினர் கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவிடமும், காவல் கண்காணிபாளர் அலுவலகத்திலும் நேற்று மனு அளித்தனர்.
மனுவில் தெரிவித்துள்ளது: கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் கரூர் தொகுதிக்கு வாக்கு எண்ணும் பணிக்கு இரு அறைகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எனவே, கூடுதலாக ஒரு அறை ஒதுக்கீடு செய்து தரவேண்டும்.
கரூர் தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளதால், வாக்கு எண்ணிக்கை 25 சுற்றுகள் வரும். எனவே, வாக்கு எண்ணிக்கை 20 மணிநேரத்துக்கு மேல் நீடிக்க வாய்ப்ப்புள்ளது.
எனவே, வாக்கு எண்ணும் அறைகளில் பாதுகாப்பு கருதி கூடுதல் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி கண்காணிக்க வேண்டும். போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.
வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் அனைவரையும் நன்கு பரிசோதித்த பின்பே உள்ளே அனுமதிக்க வேண்டும்.
கரோனா தொற்று காரணமாக முகக்கவசம் அணிதல், சானிடைசர் வழங்குதல், சமூக இடைவெளி போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும். துண்டு, கால்குலேட்டர், எழுதும் அட்டை ஆகியவற்றை அனுமதிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago