புதுக்கோட்டையில் முகக்கவசம் அணியாமல் வந்ததற்காக அபராதம் விதித்த சிறப்பு உதவி ஆய்வாளரைத் தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை போக்குவரத்து காவல் பிரிவின் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுமார், கிழக்கு ராஜ வீதியில் இரு தினங்களுக்கு முன்பு முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்துக்கொண்டு இருந்தார்.
அப்போது, ஆலங்குடி அருகே உள்ள சீகம்பட்டியைச் சேர்ந்த சி.முருகேசன்(34) என்பவர் மோட் டார் சைக்கிளில் வந்துள்ளார். முகக்கவசம் அணியாமல் வந்த அவர், போலீஸாரை பார்த்ததும் தான் வைத்திருந்த முகக்கவசத்தை அணிந்துகொண்டார்.
எனினும், முகக்கவசம் அணியாமல் வந்ததற்காக அவருக்கு சிவக்குமார் அபராதம் விதித்துள்ளார்.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமாரை முருகேசன் தாக்கினார். இதையடுத்து, முருகேசனை நகர காவல் நிலையத்தினர் கைது செய்தனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதிக்கும்போது மென்மையான போக்கை கடைபிடிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் அறிவுறுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago