ஆரணி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டை விலை குறைக்கப்பட்டதை கண்டித்து, விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. இதனால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் தனியார் கமிட்டிகளுக்கு நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்துள்ளன. சேத்துப்பட்டு, செய்யாறு, வந்தவாசி மற்றும் ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நெல் மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன. நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்து இருப்பதால், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உரிய விலையை நிர்ணயம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு நெல் மூட்டைக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிர்வாகத்திடம் விவசாயிகள் கேள்வி எழுப்பியபோது, நெல் மூட்டைகள் வரத்து அதிகமாக உள்ளதால், விலையை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், அரசாங்கம் நிர்ணயம் செய்த விலையை வழங்கக்கோரி, ஆரணி – வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், நெல் மூட்டையின் விலையை குறைக்கக்கூடாது என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்தஆரணி நகர காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அரசாங்கம் நிர்ணயம் செய்த விலையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால், சாலை மறியல் முடிவுக்கு வந்தது. விவசாயிகள் போராட்டத்தால், ஆரணி – வந்தவாசி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர், சாலை மறியலுக்கு பிறகு, ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பழைய விலையில் நெல் மூட்டைகளை வாங்குவதற்குவியாபாரிகள் முன்வரவில்லை. அப்போது இரண்டு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து நாளை (இன்று) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சுமூக தீர்வு காணப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து விவசாயிகள் புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள், உரிய விலை கிடைக்கவில்லை என்றால் நாளை (இன்று) சாலை மறியலில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர். விலை நிர்ணயம் செய்வதில் முடிவு எட்டாததால் சுமார் 7 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்படாமல் தேங்கி கிடக்கின்றன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago