செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ரவுடிகள் பலர் பல்வேறு வகையில் மிரட்டி தொல்லை கொடுத்து வந்தனர். மேலும், வியாபாரிகளிடம் கடையில் சென்று உணவு அருந்திவிட்டு பணம் கொடுக்காமல் செல்வது, அவர்களைத் தாக்குவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த ரவுடிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார், ரவுடிகளின் பட்டியலை தயார் செய்து அவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் சரவணன் (41), ஊரப்பாக்கம் ஜோன்ஸ்(28), மண்ணிவாக்கம், ராகுல்(21), வண்டலூர் கோவிந்தராஜன்(30), கொளப்பாக்கம், அஜித்குமார் (26) ஆகிய ரவுடிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைக் குறைக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குற்றவாளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதில் பல ரவுடிகள், தொடர்ந்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ரவுடிகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலர் புகார் கொடுக்க முன்வருவதில்லை.
ஆனால், போலீஸாரிடம் தகவல் மட்டும் தெரிவிக்கின்றனர். புகார் கொடுக்காததால் குற்றவாளிகளை கைது செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது எஸ்பியின் உத்தரவின் பேரில் ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்தப் பணி தொடர்ந்து நடைபெறும். எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் ரவுடிகள் தொல்லை கொடுத்தால் போலீஸாருக்கு தொலைபேசியில் தெரிவித்தால் போதும். அவ்வாறு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago