உதகை உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் உதகை உழவர்சந்தை, நகராட்சி மார்க்கெட், மத்திய பேருந்து நிலையம் ஆகியஇடங்களில் கரோனா தொற்றுவிதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கடைகளில் பொருட்கள் வாங்க வருகைதரும் வாடிக்கையாளர்களுக்கு கிருமி நாசினி அல்லது சோப்பினால் கை கழுவுவதற்கு தண்ணீர் வைக்கவேண்டும் என கடை உரிமையாளர்களிடம் ஆட்சியர் வலியுறுத்தினார்.

அதன்பின்பு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் தேவையான அளவில் கரோனா தடுப்பூசி இருப்பில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் படப்பிடிப்பில் ஈடுபடும் படக்குழுவினர், கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் சமர்ப்பித்து, படப்பிடிப்புக்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

உதகை, கோத்தகிரி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் ‘கோவிட் கேர்’ மையங்கள் தயார் நிலையில் உள்ளன. தினந்தோறும் சுமார் 1,200 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று விகிதம் 2.7 சதவீதமாக உள்ளது. வரும் வாரத்தில் கரோனா பரிசோதனைக் கருவிகள் வரவுள்ளதால், பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்