தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக நன்மைக்காக நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இவற்றை பங்காரு அடிகளார் தொடங்கிவைத்தார்.
விழாவையொட்டி, சித்தர் பீட வளாகத்தைச் சுற்றிலும், இயற்கை விளை பொருட்கள், பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. சித்தர் பீடம் வந்த பங்காரு அடிகளாருக்கு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவடட ஆன்மிக இயக்க நிர்வாகிகள் பாத பூஜை செய்து, வரவேற்றனர்.
தொடர்ந்து, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், கலசம், விளக்கு பூஜை, வேள்வியைத் தொடங்கிவைத்தார். வரும் ஆண்டில் இயற்கை வளம் செழிக்கவும், மழைப்பொழிவுக்காகவும், தொழில் வளம் சிறக்கவும், கரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும் சங்கல்பம் செய்து, பூஜைகள் நடத்தப்பட்டன. ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆன்மிக இயக்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
முன்னதாக, நேற்று முன்தினம் தெலுங்கு வருட பிறப்பான யுகாதியை முன்னிட்டு, சித்தர் பீடத்தில் சிறப்பு கலசம், விளக்கு பூஜைகள், வேள்வி நடத்தப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆந்திரா, தெலங்கானா மாநில ஆன்மிக இயக்க நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிகளில், ஆன்மிக இயக்க துணைத் தலைவர் தேவி ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சித்தர் பீடம் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அரசின் வழிகாட்டுதல்படி, முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டதுடன், அனைவரும் கிருமிநாசினி மூலம் கைகழுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago