செங்கல்பட்டு மாவட்டத்தில், கரோனா தடுப்புப் பணி மேற்கொள்ள போதிய நிதி இல்லாமல் ஊராட்சிகள் திணறி வருகின்றன. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 7 ஊராட்சி ஒன்றியத்தில், 363 ஊராட்சிகளில், கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஊராட்சியில் வரி வசூல் சரிவர நடைபெறவில்லை. இதனால் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளும் நிதிச்சுமையில் உள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு செலவும் அதிகரித்துள்ளது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ஊராட்சி செயலர்கள் சிலர் கூறியதாவது: கடந்த ஆண்டு கரோனாவால் கிருமிநாசினி மற்றும் கொசு மருந்து தெளிப்பு, ஒட்டுமொத்த தூய்மைப் பணி, முகக்கவசம் விநியோகம், கபசுர குடிநீர் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இதனால் கரோனா தடுப்பு பணிக்கான செலவு அதிகரித்துள்ளது. தற்போது ஊராட்சி நிர்வாகங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால் நிர்வாகங்கள் திணற வேண்டியுள்ளது.
கடந்த ஓர் ஆண்டாகவே ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் முழுமையாக மேற்கொள்ள வழியில்லாமல் உள்ளன. கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அரசு ஒதுக்கீடு செய்த தொகையை விட கூடுதல் செலவாகிறது. குறிப்பாக, தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் தடுப்பு உபகரணங்கள், கிருமிநாசினி மருந்து உள்ளிட்டவற்றுக்கே, செலவு செய்ய வேண்டியுள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. தற்போது, மீண்டும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட வேண்டியுள்ளதால் இதற்கென பிரத்யேக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago