காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கோயில்களில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், உக்கம்பெரும்பாக்கம் கிராமத்துக்கு அருகில் உள்ள நட்சத்திர விநாயகர் கோயில் என பல்வேறு கோயில்களில் நேற்று அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
நட்சத்திர விநாயகர் கோயிலில் உள்ள அத்தி விருட்ச ருத்ராட்சலிங்கம், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், சனீஸ்வரர் ராகு-கேது மற்றும் 27 நட்சத்திரங்களுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில், பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களே சாமி தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோயில்களில் நேற்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன. அங்கும் குறைந்த அளவு பக்தர்களே கோயில்களுக்கு வந்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago