சிட்லபாக்கம் ஏரியில் குளித்தபோது - நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

தாம்பரம் அருகே ஏரியில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் மகன் விஷாந்த்(12), கணேசன் மகன் கோகுல்(12), சாங்கித் குமார் மகன் சுனில்குமார்(12) ஆகிய மூன்று சிறுவர்களும் சேர்ந்து நேற்று முன்தினம் சிட்லபாக்கம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றனர்.

ஏரியில் குளித்து கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக சுனில்குமார் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதால் நீரில் மூழ்கினார். இதைக் கண்ட கோகுல் மற்றும் விஷாந்த் ஆகியோர் நீச்சல் தெரியாத நிலையிலும் சுனில்குமரை காப்பாற்றச் சென்றனர். 3 பேரும் கை கோர்த்தபடி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில் மாலை வெகுநேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால், 3 பேரின் பெற்றோர்களும் பல இடங்களில் தேடினர். அப்போது சிட்லபாக்கம் ஏரியில் அவர்கள் அணிந்திருந்த உடைகளைக் கண்ட அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிட்லபாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் சிட்லபாக்கம் ஏரியில் சிறுவர்களைத் தேடினர்.

பல மணிநேரம் கழித்து 3 சிறுவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. அவற்றை சிட்லபாக்கம் போலீஸார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

9 வயது சிறுமி உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே உள்ள தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன் மகள் கோபிகா(9). இவர் தண்ணீர்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய்க்கு துணி துவைக்க சென்ற தன் தாயுடன் சென்றார். அப்போது, கால்வாயில் இறங்கிய கோபிகா, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்து, தகவலறிந்த திருவள்ளூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடம் விரைந்து, கோபிகாவை தேடியும் அவர் கிடைக்கவில்லை. நேற்று காலை பூண்டி ஏரியிலிருந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, மீண்டும் தீயணைப்பு வீரர்கள் தேடியபோது, தண்ணீர்குளம் அருகே கால்வாயில் உள்ள முட்புதரில் கோபிகா சடலமாக இருந்தது தெரியவந்தது.

மீட்கப்பட்ட கோபிகாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த செவ்வாய்ப்பேட்டை போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோகுல் மற்றும் விஷாந்த் ஆகியோர் நீச்சல் தெரியாத நிலையிலும் சுனில்குமரை காப்பாற்றச் சென்றனர். 3 பேரும் கை கோர்த்தபடி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்