விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்வதன் மூலம் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படும், என ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சி.சின்னசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் தற்போது பெய்யும் கோடை மழையால், வயல் ஈரப்பதமாக உள்ள நிலையில், விவசாயிகள் தங்களது நிலத்தை உழவு செய்யலாம். இதன்மூலம், மண்ணில் புதையுண்டுள்ள பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் வெளியில் கொண்டு வரப்படுவதால், பறவைகளாலும், சூரிய வெப்பத்தாலும் அவை அழிந்து விடும். மக்காச்சோளம் படைப்புழுவின் கூட்டுப்புழுக்களையும், முட்டைகளை அழிப்பதற்கும் இது சிறந்த முறையாகும்.
படைப்புழுக்களின் வாழ்க்கை சுழற்சிக்கு உதவும் களைச்செடிகளும், அதன் விதைகளும் கோடை உழவினால் அழிக்கப்படுகின்றன. கோடை உழவு செய்வதன் மூலம் மழைநீரை வீணாக்காமல் சேமிக்கலாம். இது மண்ணின் தன்மையை அதிகரித்து காற்றோட்டத்தை ஏற்படுத்தும். நுண்ணுயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
நிலத்தின் மேல் மண்ணை உழவு செய்து ஒரு புழுதி படலம் அமைத்து விட்டால், மேல்பகுதி வெப்பம், கீழ்பகுதிக்குச் சென்று நிலத்தில் உள்ள ஈரம் ஆவியாக விடாமல் புழுதிப்படலம் தடுத்து விடும். கோடை உழவு செய்தால் மேல் மண் துகள்களாகிறது. இதனால், மண் வெப்பத்தை உறிஞ்சி விரைவில் குளிர்ந்து விடும். எனவே, நிலத்தில் நீர் இறங்கும் திறன் அதிகரிக்கும்
கோடை உழவினை சரிவிற்கு குறுக்கே உழ வேண்டும். இதனால் மண் அரிமானம் கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் மண் புரட்டப்பட்டு, இறுக்கம் தளர்த்தப்பட்டு இலகுவாகிறது. இதன்பின் ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வரை வேப்பம்புண்ணாக்கு போட்டு, உழவுப்பணியினைத் தொடங்கலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago