சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து : பாதிவழியில் திருப்பி அனுப்பப்பட்ட பக்தர்கள்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று பக்தர்கள் தரிசனம் ரத்துசெய்யப்பட்டதால், பாதி வழியில்ஆயிரக்கணக்கான பக்தர்கள் போலீஸாரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள சிறுவாபுரி கிராமத்தில் பிரசித்திப் பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செவ்வாய்க்கிழமைதோறும் தமிழகம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், பக்தர்கள் மூலம் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்றுமுன்தினம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர், பெரியபாளையம் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், வட்டார மருத்துவ அலுவலர், கோயில் செயல் அலுவலர் உள்ளிட்டோர் அளித்த அறிக்கைகளின் அடிப்படையில், கோட்டாட்சியர் செல்வம், கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கரோனா பிரச்சனை முடியும் வரை செவ்வாய்க்கிழமைகள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் (இன்று) பொதுமக்கள் தரிசனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

சாலையில் படுத்து போராட்டம்

அந்த உத்தரவின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமையான நேற்று கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

இதை அறியாமல், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று சிறுவாபுரி வந்தனர். அவர்கள், போலீஸாரால் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள புதுரோடு மற்றும் புதுவாயல்- ஆரணி சாலையில், அகரம் ஆகிய பகுதிகளில் தடுப்புகளை அமைக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதனால் கோபமடைந்த பக்தர்கள் பலர், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, சாலையில் படுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த சூழல், நேற்று காலை முதல் மதியம் வரை இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE