கரோனா கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை - விதிமீறல் அபராதத்திற்கு அசல் ரசீது : அதிகாரிகளுக்கு கடலூர் ஆட்சியர் உத்தரவு

By செய்திப்பிரிவு

கரோனா கட்டுப்பாடுகளை மீறும் தனி நபர்கள், நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களுக்கு உரிய அசல் ரசீது தரப்பட வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி அறிவுறுத்தியுள்ளார்.

கரோனா பரவலைத் தடுப்பது தொடர்பாக பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கடலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்ததாவது:

கரோனா இரண்டாம் அலை நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கண்காணிப்பு குழுவில் உள்ள அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அவரவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் கரோனா தடுப்பு கண்காணிப்பு பணியைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மக்கள் அதிகம் கூடும் கடைத்தெருக்கள், மீன் சந்தைகள், இறைச்சிக் கடைகள், காய்கறி சந்தைகள், வணிக நிறுவனங்கள்,தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதம், கரோனா தொற்றால் தனிமை படுத்துதலில் விதி மீறல்களுக்கு ரூ.500 அபராதம், அரசால் வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.5,000 அபராதம், கட்டுப்பாட்டு மையங்களில் விதிகளை மீறும் தனி நபருக்கு ரூ.500 அபராதம், கட்டுப்பாட்டு மையங்களில் விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.

விதி மீறல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து அபராதத்தொகை வசூலிக்கும்போது அரசால் வழங்கப்பட்டுள்ள ரசீது புத்தகத்தில் இருந்து, அசல் ரசீதினை அபராதம் செலுத்தும் நபருக்கு வழங்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்