சித்தோடு சாலை போக்குவரத்து தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையப் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஒளிபரப்பில் பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சித்தோடு ஐஆர்டிடி கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் உட்புறம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை, வேட்பாளரின் முகவர்கள், அதிகாரிகள், காவல்துறையினர்பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் மட்டும் 96 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சூறாவளிக் காற்று வீசியது. இதனைத் தொடர்ந்து மழை பெய்தது. இதில் வாக்குஎண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஷாமியானா பந்தல், ஒயர்கள், கேமராக்கள் போன்றவை சேதமடைந்தன. மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால், 16 கேமராக்களை இணைக்கும் ஒயர்கள் அறுந்தன. இதனால், அதில் பதிவாகும் வீடியோ காட்சிகள் ஒளிபரப்பாகவில்லை. இதனால், வேட்பாளர்களின் முகவர்கள் குழப்பமடைந்தனர்.
இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
பலத்த காற்று வீசி, மழை பெய்ததால் சில கேமரா பதிவுகள் ஒளிபரப்பாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வேட்பாளர்களின் முகவர்களை, தேர்தல் அலுவலர்கள் அழைத்துச் சென்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை காட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து நேற்று காலை அனைத்து இணைப்புகளும் சரி செய்யப்பட்டன. இவ்வாறு கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago