நெல்லை உட்பட தென் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு - கூட்டப்புளி ஆசிரியை, குமரிக்கு வந்த சென்னை பொறியாளர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் கூட்டமாக குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. கூட்டப்புளியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியை உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 217 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மட்டும் 102 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வட்டார அளவில் அம்பாசமுத்தி ரத்தில் 14 பேர், மானூரில் 19 பேர், நாங்குநேரியில் 9 பேர், பாளையங்கோட்டையில் 25 பேர், பாப்பாக்குடியில் 7 பேர், ராதாபுரத்தில் 9 பேர், வள்ளியூரில் 20 பேர், சேரன்மகாதேவியில் 7 பேர், களக்காட்டில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியை மரணம்

திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளி மீனவர் கிராமத்தை சேர்ந்த 55 வயது பெண் கரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த இவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவர் வசித்துவந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

தாமிரபரணியில் குளிக்கத் தடை

இதனிடையே கரோனா வேகமாக பரவிவருவதை கருத்தில் கொண்டு தாமிரபரணி ஆற்றில் கூட்டமாக குளிக்க தடைவிதித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு நேற்று மாலையில் உத்தரவிட்டார்.

ஆட்சியர் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கும் பொருட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,240 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

மேலும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 200 படுக்கைகள், பத்தமடை சுவாமி சிவானந்தா தர்ம நூற்றாண்டு மருத்துமனையில் 110 படுக்கைகள், கூடங்குளம் அரசு மருத்துவமனையில் 105 படுக்கைகள் என்று மொத்தம் 415 படுக்கை வசதிகளுடன் 3 சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.சிகிச்சை அளிக்க போதுமான அளவு மருந்து, மாத்திரைகள், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவை யில்லை. பொதுமக்கள், கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பான சந்தேகங்களுக்கு திருநெல்வேலி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில்24மணிநேரமும் இயங்கி வரும் கோவிட் - 19 கட்டுப்பாட்டு மையத்தை 0462 - 2501012 அல்லது 1077 (கட்டணமில்லா தொலைபேசி எண்), மற்றும் 0462-2501070 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

மேலும், 6374013254 மற்றும் 9499933893 என்ற கைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் தகவல் அளிக்கலாம். தற்போது கூடுதலாக வருவாய் துறை அலுவலர்களை கொண்டு 10 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்று தொடர்பாக விதிமீறல்கள் கண்டறியப்பட்டு அதன் மூலம் கடந்த 1-ம் தேதி முதல் இதுவரை ரூ.29,76,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

நாகர்கோவில்

தடுப்பு வேலி

நாகர்கோவில் அருகே வல்லன்குமாரவிளையில் ஒரே தெருவில் 8 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டதால், அங்கு கிருமி நாசினி தெளித்து தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. கரோனா விதிமுறைகளை மீறியதாக செட்டிக்குளத்தில் உள்ள திரையரங்குக்கு மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

கரோனா நோய் சிகிச்சை தொடர்பாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் ஆட்சியர் மா.அரவிந்த் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறும் போது, “ ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கரோனா தொற்று நோய் பிரிவில் தற்போது 200 படுக்கைகள் உள்ளன. கூடுதலாக 300 படுக்கைகள் அமைக்கப் படவுள்ளன. மொத்தமுள்ள 500 படுக்கைகளில் 200 படுக்கை களில் ஆக்ஸிஜன் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

மாவட்டத்தில் இதுவரை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோ ருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரே தெருவில் 3 வீடுகளுக்கு மேல் கரோனாவால் பாதித்தோர் இருந்தால் அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என்றார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 82 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,326 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 712 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்