திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த, தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு மையங்களில் 2,500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருப்பதாக ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தில் பணியாற்றி வரும் 45 வயதுக்கு மேற்பட்ட ரயில்வே தொழிலாளர் களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, வாணி யம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தில் உள்ள தனியார் தோல் பொருட்கள் தயாரிக்கும்தொழிற்சாலையில் கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதைத்தொடந்து, அந்த தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 45 வயதுக்கு மேற்பட்ட 210 தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் முகாமை ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னேற் பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 360 ரயில்வே தொழிலாளர்களில் 120 தொழிலாளர் களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வருவோருக்கு ரயில் நிலையத்திலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ள ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் சுகாதாரப்பணியாளர்கள் பணி யமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள். ரயில்களில் வரும் வெளிமாநில பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வார்கள்.
அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழி லாளர்களுக்கும் கரோனா பரிசோ தனை செய்யவும், 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தடுப்பூசி முகாம் ஒவ்வொரு வட்டத்திலும் நடத்தப்படும்.
தொழிற்சாலை நிறுவனங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். அதை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தினசரி கரோனா தடுப்புப்பணிகளை மேற்கொள்வார்கள். விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொழிலாளர்களும் பணிக்கு வரும்போது முகக்கவசம் அணிந்து வர வேண்டும். பணியில் ஈடுபடுவோர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தொழிலாளர்கள் பணிக்கு வரும்போது உடல் வெப்ப பரிசோதனையை தினசரி மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ள தொழிலாளர்களை பணி செய்ய அனுமதிக்கக்கூடாது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள், சிறப்பு மையங்கள் என 4 வட்டங்களில் 2,500 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 100 படுக்கை வசதியுடன் கூடிய கரோனா சிறப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் தற்போது 93 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் கடந்த ஆண்டைப் போல இந்த முறையும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்தவித அச்சமுமின்றி தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வர வேண்டும். தடுப்பூசி என்பது நம்மையும், நம்மை சார்ந்தவர்களையும் பாதுகாப்பது என்பது பொதுமக்கள் உணர வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில், கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சுமதி, வட்டார மருத்துவ அலுவலர்கள் பசுபதி, மீனாட்சி, ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் உமாசங்கர், ஜோலார்பேட்டை ரயில்வே நிலைய மேலாளர் சுந்தரமூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago