கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, சுகாதாரத் துறை சார்பில் ஆவடி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையொட்டி, திருவள்ளூர் அருகே பட்டரைபெரும்புதூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி விடுதியில் `கோவிட் கேர்' மையம் அமைக்கப்பட உள்ளது. அங்கு நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேற்று ஆய்வு செய்தார். மேலும், காக்களூர் ஊராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற, கரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமில் மக்களுக்கு தடுப்பூசி போடப்படுவதையும், சளி மாதிரிகள் சேகரிக்கும் பணியையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜவஹர்லால் உடனிருந்தனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு சட்டக் கல்லூரி விடுதியில் அமைக்கப்பட உள்ள `கோவிட் கேர்' மையத்தில் இன்னும் சில நாட்களில் கரோனா நோயாளிகளைத் தங்கவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மொத்தம் 720 படுக்கை வசதிகளுடன் அமையும் இம்மையத்தில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கி, 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுவர். இதற்கான அடிப்படை வசதிகள், குடிநீர், உணவு, மெத்தை உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தினமும் 3,500-க்கும் மேற்பட்டோரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, தினமும் 2,100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago