திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே 163 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது புன்னப்பாக்கம் ஏரி.
பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள இந்த ஏரி சுமார் 2 ஆயிரம் குடும்பங்களின் விவசாயத் தேவை மற்றும் கால்நடைப் பராமரிப்புக்கு உதவியாக இருப்பதுடன், புன்னப்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களின் குடிநீருக்கும் ஆதாரமாக உள்ளது.
இந்நிலையில், புன்னப்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி செயல்பட, பொதுப்பணித் துறை மற்றும் கனிமவளத் துறை அதிகாரிகள் அண்மையில் அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து, கடந்த மார்ச் 19-ம் தேதி முதல் மண் குவாரி செயல்படத் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், புன்னப்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி செயல்பட்டால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், ஏரியில் உள்ள மரங்கள் அழிந்துவிடும் என்று கூறி, ஏரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடந்த 3, 10-ம் தேதிகளிலும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், மண் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி நேற்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை சமாதானப்படுத்திய திருவள்ளூர் டவுன் போலீஸார், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் செய்தனர். பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா உறுதியளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
புன்னப்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி செயல்பட்டால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், ஏரியில் உள்ள மரங்கள் அழிந்துவிடும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago