ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா ஊர்வலமின்றி காவிரி ஆற்றில் விடப்பட்ட கம்பங்கள் :

By செய்திப்பிரிவு

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்பின்றி, கம்பங்கள் பிடுங்கப்பட்டு காவிரி ஆற்றில் விடப்பட்டன.

ஈரோட்டின் காவல்தெய்வமாக விளங்கும் பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களான பெரிய மாரியம்மன், கரை வாய்க்கால் மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 6-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 7-ம் தேதி இரவு பெரிய மாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் கம்பம் நடப்பட்டன.

அதைத் தொடர்ந்து, பக்தர்கள் தினமும் கம்பங்களுக்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வந்தனர். கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, காரை வாய்க்கால் மாரியம்மன் கோயிலில் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், சின்ன மாரியம்மன் கோயில் தேரோட்டமும் எளிமையான முறையில் நடந்தது.

ஈரோட்டில் கரோனா பரவல் அதிகரித்த நிலையில், கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டன. கோயிலில் நடப்பட்டுள்ள கம்பங்களுக்கு பக்தர்கள் புனிதநீர் ஊற்ற அனுமதி மறுக்கப்பட்டது. பெரியமாரியம்மன் கோயில் திருவிழாவில், கம்பம் பிடுங்கி ஆற்றில் விடும் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு, பக்தர்கள் பங்கேற்பின்றி, நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் திருவிழா கம்பங்கள் தனித்தனியாக எடுக்கப்பட்டு, வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் விடப்பட்டது. இந்த நிகழ்வில் 3 கோயில்களின் பூசாரிகள், செயல் அலுவலர் ரமணி காந்தன், வட்டாட்சியர் பாலசுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி கோயிலில் நடப்பட்ட கம்பங்கள் நேற்று அதிகாலை பிடுங்கப்பட்டு, பூசாரிகள் அவற்றை காவிரி ஆற்றில் விட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்