நாமக்கல் மாவட்டத்தில் - 4 இடங்களில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் : மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் உத்தரவு

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 இடங்களில் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 87 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 வயதை தாண்டியவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் வலியுறுத்த வேண்டும்.

வயதானவர்கள், இதய நோய் மற்றும் சிறுநீரக நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ளிட்ட அனைத்து வயதினருமே தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது.

தேவைகளுக்காக வெளியே வரும்போதும் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கிருமிநாசினி திரவங்களை பயன்படுத்துவது, முகக்கவசம் அணிவது உள்ளிட்டவற்றை தவறாது பின்பற்ற வேண்டும்.

காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ளவர்கள் தாங்களாகவே சிகிச்சை மேற்கொள்ளாமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

திருமண மண்டபங்களில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளின்போது தொற்று தடுப்பு வழிகாட்டி விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்று அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

வருவாய்த்துறையினர், காவல்துறையினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் குழுக்கள் அமைத்து பேருந்துகள், வாகனங்களில் செல்பவர்கள் அரசு விதிமுறைகளை பின்பற்றுகின்றனரா என ஆய்வு செய்ய வேண்டும்.

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி, ராசிபுரம் எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி, திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரி ஆகிய இடங்களில் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் திறக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் த.கா. சித்ரா, துணை இயக்குநர் எஸ். சோமசுந்தரம், கோட்டாட்சியர்கள் மு.கோட்டைகுமார், ப.மணிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நாமக்கல்லில் நடைபெற்ற கரோனா நோய் தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்