சங்கரன்கோவிலில் சுகாதார துணை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்ட பின்னர், இந்த அலுவலகத்தை தென்காசிக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால், இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரி வித்தன. இதனால், இந்த பணிகள் தாமதமாகின. இந்நிலையில், சங்கரன்கோவில் சுகாதார துணை இயக்குநர் அலுவலகத்தை தென்காசிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் தென்காசி ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு இந்த அலுவலகம் இடமாற்றம் செய்யப் படும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டமாக இருந்தபோது, 2 சுகாதார மாவட்டங்கள் இருந்தன. அதில், ஒன்று சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு இயங்கியது.
தென்காசி மாவட்டம் பிரிக்கப் பட்ட பின்னர், மாவட்டத்துக்கு ஒருசுகாதார மாவட்டம் உள்ளது. சுகாதார துணை இயக்குநர் அலுவலகம்மாவட்ட தலைமையிடத்தில் இயங்க வேண்டும் என்பது நடைமுறை. அதன் அடிப்படையில் தென்காசிக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது நிர்வாக வசதிக்கு எளிதாக இருக்கும்.
சுகாதார துணை இயக்குநர் அலுவலகத்துடன் மக்களுக்கு நேரடி தொடர்பு அதிகமாக இருக்காது. தனி மாவட்டமாக பிரிந்தபின்னர் இந்த அலுவலகம் சங்கரன்கோவிலில் இருப்பது நிர்வாக வசதிக்கு சிரமமாக இருந்தது. தென்காசிக்கு மாற்றப்பட்டால் சங்கரன்கோவில், குருவிகுளம் வட்டாரங்களைத் தவிர மற்ற அனைத்து வட்டாரங்களுக்கும் அருகாமையிலான பகுதியாக இருக்கும்” என்றனர். அரசியல் காரணங்களுக்காக சங்கரன்கோவில் சுகாதார துணைஇயக்குநர் அலுவலகம் நீண்ட காலமாக தென்காசிக்கு மாற்றப்படாமல் இருந்தது என்றும், அதனால் தேர்தல் காலத்தில் தென்காசிக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago