கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் அச்சத்தால் - வேலூர் மாவட்டத்தில் அனைத்து வாரச்சந்தைகள் மூடல் : முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஆட்சியர் உத்தரவு

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் அச்சத்தால் அனைத்து வாரச்சந்தைகளையும் மூட உத்தரவிட் டுள்ளதுடன் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோ சனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 520 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த னர். தற்போது, 10 நாளில் 720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கரோனா தொற்று பரவல் 3 மடங்கு அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற் பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்‌.

மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறு வனங்களில் பணியாற்றுபவர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதேபோல், வியாபாரிகள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கடைகளில் தடுப்பூசி போட்டதற் கான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும். கரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகளின் கடைக்கு அதிகாரிகள் ‘சீல்' வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடியாத்தம், பேரணாம்பட்டு, நகராட்சி பகுதிகள் மற்றும் திருவலம், ஒடுக்கத்தூர், பள்ளி கொண்டா, பென்னாத்தூர் ஆகிய நான்கு பேரூராட்சி பகுதிகள் மற்றும் வேலூர், அணைக்கட்டு, கணியம்பாடி, காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களிலும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவது என இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும். மாவட்டத்தில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடாதவர்கள் இருந் தால் அவர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாரச் சந்தைகளையும் மூட வேண்டும். பொதுமக்கள் வீடுகளுக்கே அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் வகையில் தெருக்களில் விற்பனை செய்ய வேண்டும். அத்துடன் சில்லறை காய்கறி கடைகள் ஏற்கெனவே செயல்பட்டு வந்த பள்ளி, கல்லூரி வளாகங்களில் செயல்படும். வேலூர் மாவட் டத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் அரசு ஊழியர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

உழவர் சந்தை இடமாற்றம்

வேலூர் மாவட்டத்தில் வேலூர் டோல்கேட், காகிதப்பட்டறை, காட்பாடி, குடியாத்தம் ஆகிய நான்கு உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. இதில், காகிதப்பட்டறை உழவர் சந்தையை தவிர்த்து மீதமுள்ள மூன்று உழவர் சந்தைகள் அருகில் உள்ள பள்ளி மைதானங்களுக்கு மாற்ற ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் டோல்கேட் உழவர் சந்தை தொரப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், காட்பாடி உழவர் சந்தை காட்பாடி டான்போஸ்கோ மெட்ரிக் பள்ளி மைதானத்துக்கும், குடியாத்தம் உழவர் சந்தை நகராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. உழவர் சந்தைக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்