நீரா பானம் இறக்குவதற்கான நிபந்தனைகளை அரசு நீக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
நீரா மற்றும் பதநீர் இறக்குவதற்கான அனுமதி நிபந்தனைகளுடன் ஏற்கெனவே மரம் ஏறுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக அரசு ஒரு அரசாணை மூலம் நீரா பானம் இறக்குவதற்கான அனுமதியை, நிபந்தனைகளுடன் வழங்கியுள்ளது.
இதன்படி, ஒரு விவசாயி 100 தென்னை மரங்கள் வைத்திருந்தால், 5 மரங்களிலிருந்து மட்டுமே நீரா இறக்க முடியும். மேலும்,1000 பேர் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் மட்டுமே நீரா இறக்கவும், சந்தைப் படுத்தவும் முடியும். இத்துடன், நீரா இறக்குவதற்கும், இறக்கியதை எடுத்துச் செல்வதற்கும், எடுத்துச் சென்றதை விற்பதற்கும் அனுமதி பெற வேண்டும்.
இவ்வளவு நிபந்தனைகளையும் முழுமையாக்கி, நீரா இறக்குவது என்பது விவசாயிகளுக்கு எளிதானது அல்ல. இந்த நிபந்தனைகள் முற்றிலும் அகற்றப்பட்டால் மட்டுமே, அனைவரும் நீரா இறக்கவும், இறக்கியதை மதிப்புக் கூட்டுப் பண்டங்களாக மாற்றி உள்நாட்டிலும், உலகளவிலும் சந்தைப்படுத்துவது எளிதாகும். எனவே, நீரா பானம் இறக்குவதற்கான நிபந்தனைகளை அரசு நீக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago