தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனினும், டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைப்பது தொடர்பாக அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கரோனாதொற்று தடுப்புக்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாதுபின்பற்ற வேண்டுமெனவும், தவறினால் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன், சீல் வைக்கவும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று நகராட்சிநிர்வாகம் மற்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர். இதையொட்டி, டாஸ்மாக் கடைகளின் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, மது வாங்க வருவோர் வரிசையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில், கட்டாயம் முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்டவை குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது. மது வாங்க வருவோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான இந்த நடைமுறையை, நகரின் மற்ற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் அமல்படுத்த வேண்டும், கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் கூறும்போது, "விஷ்ணுகாஞ்சி காவல்நிலைய ஆய்வாளர் அறிவுறுத்தலின்பேரில், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு வாசகங்களை அறிவித்து வருகிறோம். இதன் மூலம் கடைக்கு வருவோர் முகக்கவசம் அணிந்து வருவதுடன், சமூக இடைவெளியைப் பின்பற்றுகின்றனர்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago