புதுக்கோட்டையில் - போதை ஊசி விற்ற இளைஞர்கள் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டையில் போதை ஊசி விற்ற இளைஞர்கள் 4 பேர் குண்டர் சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டையில் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் விசாரித்து வந்தனர்.

தனிப்படையினர், புதுக்கோட் டையில் இளைஞர்களை குறி வைத்து வலைப்பின்னல்போல செயல்பட்டு போதை ஊசி, மாத்திரை விற்று வந்த புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 3-ம் வீதியைச் சேர்ந்த ரமேஷ் மனோகர் மகன் சூரியநாராயணன்(19), சத்தியமூர்த்தி நகர் கணேசன் மகன் விக்னேஷ்(23), பெரியார் நகர் சுப்பையா மகன் பாண்டி(25), பூங்கா நகர் கருப்பையா மகன் பாஸ்கர்(34), ராஜகோபாலபுரம் ஆறுமுகம் மகன் அனுமந்தன்(19), பூங்கா நகர் அண்ணாசாமி மகன் அற்புதன்(34), அம்பாள்புரம் 1-ம் வீதி திலகரத்தினம் மகன் சரண்(21) ஆகிய 7 பேரை கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இவர்களிடம் இருந்து ஏராளமான போதை மாத்திரைகள், போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தவிர, போதை ஊசி விற்பனைக்காக பயன்படுத்திய 5 செல்போன்கள், 4 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், பாண்டி, விக்னேஷ், பாஸ்கர், அற்புதன் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் அளித்த பரிந்துரையை ஏற்று, 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்