கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு - அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க தன்னார்வலர்கள் நியமனம் : கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு உதவி புரிய தன்னார் வலர்கள் நியமிக்கப்படுவார்கள் என கரூர் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் கரோனா 2-ம் அலை பரவலை தடுப்பது தொடர் பாக தமிழக அரசு அளித்துள்ள வழி முறைகளை கடைபிடிப்பது தொடர்பாக முக்கியத்துறை அலுவலர்களுடனான ஆலோச னைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அண்மை யில் நடைபெற்றது.

இதில், ஆட்சியர் தெரிவித்தது: கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. அனைத்து திரையரங்குகளிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அறிவுறுத் தப்பட்டுள்ளது.

கரோனா தொற்று கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள், அந்தப் பகுதிகளிலிருந்து வெளியே வராத வகையில், காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை ஊழியர்களைக் கொண்டு 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இந்தப் பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதோடு, கரோனா தொற்று கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு உதவி புரிய தன்னார் வலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்திடவும், வீடுவீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை தினந்தோறும் கண்காணிக்கவும், கரோனா தொற்று ஏற்பட்டவர்களது தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த பரிசோதனைகள் மேற்கொள்ளவும் காவல், சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி அமைப்புகளின் துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப் படுகிறது.

அரசு மருத்துவ நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இங்கு கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இரு வாரங்களுக்குள்ளாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் பாலகணேசன், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல்வர் அசோகன், கரூர் நகராட்சி ஆணையர் சுதா, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ஞானகண்பிரேம்நவாஸ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சந்தோஷ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்