காட்பாடி அருகே காட்டு யானைகள் நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை யொட்டியுள்ள ஆந்திர வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் அங்குள்ள விவசாய நிலங்களில் நுழைந்து பயிர் வகைகளை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாகி வருகின்றன.
வனத்துறையினர் யானைகளை விரட்டியடித்தாலும் அடுத்த சில நாட்களிலேயே யானைகள் மீண்டும் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், காட்பாடி அடுத்த பள்ளத்தூர் அருகே கடந்த சில நாட்களாக சுற்றித்திரியும் யானைக்கூட்டம் அங்குள்ள விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நேற்று முன்தினம் ஆந்திர மாநிலத்தில் இருந்து வெளியேறிய யானைக் கூட்டம் தமிழக எல்லைப் பகுதிக்குள் நுழைந்தது. அந்த யானைக் கூட்டத்தை வனத் துறையினர் விரட்டியடித்தனர்.
இந்நிலையில், காட்பாடி அடுத்த பரதராமி - வேலூர் சாலை வழியாக 9 காட்டு யானைகள் கடந்து சென்றன. இதைக்கண்ட பொதுமக்கள் யானைகளை விரட்டியடிக்க முயன்றனர். அதற்குள்ளாக பள்ளத்தூர் அடுத்த கருப்புக்கட்டு பகுதி வழியாக யானைகள் வனப்பகுதிக்குள் நுழைந்தன.
இருப்பினும், வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ள 9 காட்டு யானைகளும் எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம் என்பதால் பள்ளத்தூர், பரத ராமியைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். வனத் துறையினரும் யானைகளை கண்காணிக்க அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago