விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நரிக்குடி அடுத்துள்ள இருஞ் சிறை கிராமத்தின் அருகே வயல் வெளிகளுக்கு நடுவில் பழமையான கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலில் ஒரு பழமையான சிற்பம் இருப்பதாக ஊர் மக்கள் அளித்த தகவலையடுத்து, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி வரலாற்றுத் துறைப் பேராசிரியர் செல்லப்பாண்டியன், பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர் தர் ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து பேராசிரியர் செல்லப்பாண்டியன் கூறியதாவது:
இச்சிற்பத்தின் அமைப்பு இடைக்கால பாண்டியர்களின் காலகட்டத்தைச் சேர்ந்தது. இடை க்கால பாண்டியர்களின் காலம் கி.பி 960 முதல் 1230 வரை ஆகும். இச்சிற்பம் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இச்சிற்பத்தின் தலையை கிரீடத்துடன் கூடிய அடர்த்தியான ஜடாபாரம் அலங்கரிக்கிறது. இரு காதுகளிலும் வட்ட வடிவ பத்ர குண்டலங்கள் அணிந்து, வட்டவடிவ முகம், எடுப்பான நாசி, தடித்த உதடுகளை உடைய திருவாய், அகன்ற தோளுடன் காட்சியளிக்கிறார்.
மேலும் இரு கைகளின் மேல் புஜங்களிலும் உருளை வடிவுடைய தோள் வளைகளும், முன் னங்கைகளில் கை வளைகளும் உள்ளன. மார்பில் அணிகலன்கள் அணிந்தும் முப்பரி நூலோடு, மார்பு சற்றே விரிந்து கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். வலது கரம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இடுப்பையும், இடது காலையும் இணைத்து யோக பட்டை காணப்படுகிறது. வலது காலை மடித்தும், இடது காலை நீட்டியும் உட்குதியாசன கோலத்தில் அமர்ந்துள்ளார்.
இடைக்கால பாண்டியர்களின் கலைப் படைப்புகள் மிகவும் அழகாகவும், காண்போரின் கண் களையும், கருத்துக்களையும் கவரும் விதத்தில் இருக்கும். இந்த அரிய பொக்கிஷங்களைக் காப்பது நமது கடமை. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
களப்பணியின்போது இருஞ்சிறை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெயசந்திரன் உடன் இருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago