சேத்தியாத்தோப்பு அருகே ஊருக்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத் தோப்பு அருகே உள்ள வீரமடையாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கருப்பன். நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது வீட்டு தோட்டத்தில் நாய்கள் குறைக்கும் சத்தத்தை கேட்டு கருப்பன் எழுந்து தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு கட்டப்பட்டிருந்த அவருடைய மாடு, கட்டை அவிழ்த்து கொண்டு நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மாட்டை பிடிக்க முயன்றார். அதன் அருகில் ஒரு முதலையை பார்த்து அதிர்ச்சி அடைந்து முதலையை விரட்டினார். முதலை அருகில் இருந்த வயலில் இறங்கி மறைந்தது.
இது குறித்து நேற்று காலைகிராம மக்கள் மற்றும் சேத்தியாத்தோப்பு போலீஸாருக் கும், சிதம்பரம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற சிதம்பரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வனவர் அஜிதா, வனகாப்பாளர்கள் சரண்யா, அனுசுயா மற்றும் வன ஊழியர்கள் செந்தில்குமார், புஷ்பராஜ், ஸ்டாலின் ஆகியோர் கொண்ட குழுவினர் வயலில் இறங்கி முதலையை தேடினர். சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு 300 கிலோ எடை, எட்டு அடி நீளம் கொண்ட முதலையை பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வக்ரமாரி குளத்தில் விட்டனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "முதலை அருகே உள்ள வெள்ளாற்றில் இருந்து இரைதேடி ஊருக்குள் வந்து இருக்கலாம்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago