காவல் நிலையத்தில் உயிரிழந்த இளைஞரின் : தந்தையை மிரட்டியோரை கைது செய்ய உத்தரவு :

மதுரையில் பணத்துக்காக இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் பாலமுருகன்(22) உட்பட சிலரை அவனியாபுரம் போலீஸார் கைது செய்தனர். இதில் பாலமுருகன் உயிரிழந்தார். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சோலையழகுபுரத்தைச் சேர்ந்த அவரது தந்தை பி.முத்துக்கருப்பன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில், போலீஸார் என் மகனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர் அவரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் இறந்தார். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனுவை முத்துக்கருப்பன் திடீரென திரும்பப் பெற்றார். அவனியாபுரம் போலீஸார் மற்றும் கடத்தப்பட்ட இளைஞரின் பெற்றோர் மிரட்டியதால் முத்துக்கருப்பன் மனுவை திரும்பப் பெற்றதாக வழக்கறிஞர் ஹென்றி டிபேன் உயர் நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து முத்துக்கருப்பன் திரும்பப் பெற்ற மனுவை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முத்துக்கருப்பனை மிரட்டிய ஆதிநாராயணன், கதிர், லோகநாதன், ரமேஷ் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என மதுரை மாநகர் காவல் ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE