நெல்லை மாவட்டத்தில் புதிய உச்சம் - ஒரேநாளில் 115 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 115 பேருக்குகரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 200-க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது உச்ச அளவாக இருந்த நிலையில் இவ்வாண்டு புதிய உச்சமாக நேற்று மட்டும்115 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகரில் 57 பேர், பாளையங்கோட்டை வட்டாரத்தில் 11, நாங்குநேரியில் 10, மானூர், பாப்பாக்குடியில் தலா 9, அம்பாசமுத்திரத்தில் 7, களக்காட்டில் 5, வள்ளியூரில் 4, சேரன்மகாதேவியில் 2, ராதாபுரத்தில் ஒருவர் என்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாப்பாக்குடி மற்றும் பாளையங்கோட்டை ஆயுதப்படையில் பணியாற்றும் 4 போலீஸாருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ஒரு மருத்துவருக்கு ஏற்கெனவே தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்திருந்த நிலையில் மீண்டும் அவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,670 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்குமுன் திருநெல்வேலி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 பேர் மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. பேருந்துகள், ஆட்டோக்கள், ஏடிஎம் மையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் முன்னிலையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. ரயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகள் மற்றும் ரயில்களில் வந்திறங்கும் பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக நுழை வாயிலில் தானியங்கி உடல் வெப்பநிலை கண்டறியும் கருவி பொருத்தப்பட்டு, கணினி மூலம் கண்காணிக்கப்படுகிறது. முகக்கவசம் இல்லாமல் செல்லும் பயணிகளுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது.

திருநெல்வேலி மாநகரில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர். கபசுர குடிநீரும் வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாநகராட்சியில் கரோனா கட்டுப்பாடுகளை கண்காணிக்க 12 குழுக்களை மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் அமைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்