ஆழ்துளை கிணறுகள் வறண்டதால் - சூளகிரியில் தண்ணீரை விலைக்கு வாங்கி ரோஜா செடிகளை காப்பாற்றும் விவசாயிகள் :

By எஸ்.கே.ரமேஷ்

சூளகிரி, பேரிகை, பாகலூர் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் வறண்டதால், பசுமைக்குடில் மூலம் வளர்க்கப்படும் ரோஜா செடிகளுக்கு தண்ணீர் விலைக்கு வாங்கி விவசாயிகள் காப்பாற்றி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, பேரிகை, சூளகிரி, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதேஷ்ணநிலை காரணமாக 475 ஹெக்டேர் பரப்பளவில் பசுமைக்குடில் அமைத்து விவசாயிகள் ரோஜா மலர் சாகுபடி செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இங்கிருந்து ரோஜா மலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா காலங்களில் ஏற்றுமதி அதிகரிக்கும். கரோனா, சீதோஷ்ணநிலை மாற்றம், நோய் தாக்கம் உள்ளிட்டவையால் மலர் விவசாயிகள் தொடர் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் தற்போது போதிய மழையின்றி, நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளதால், டிராக்டர், லாரி மூலம் தண்ணீர் விலைக்கு வாங்கி, பசுமைக்குடில் மூலம் உற்பத்தி செய்யப்படும் ரோஜா, கொய்மலர்கள் உயிர்ப்புடன் வைத்துள்ளதாக மலர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக தேசிய தோட்டக்கலைத்துறை வாரிய இயக்குநர் பாலசிவபிரசாத் கூறும்போது, ‘‘போதிய மழை இல்லாததால், கோடைக்காலம் தொடங்குதற்கு முன்பே, பேரிகை, பாகலூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது, ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வறண்டுவிட்டது. புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்தாலும், 1200 அடி முதல் 1500 அடிக்கு அப்பால் தான் தண்ணீர் ஓரளவிற்கு கிடைக்கிறது. பசுமைக்குடில் மூலம் வளர்க்கப்படும் ரோஜா, கொய் மலர்களுக்கு தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். ஒரு ரோஜா செடிக்கு நாள் ஒன்றுக்கு 1.5 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு ஏக்கரில் 35 ஆயிரம் ரோஜா செடிகள் மற்றும் தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளுக்கு நாள்தோறும் 65 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. 18 ஆயிரம் லிட்டர் கொண்ட ஒரு டேங்கர் லாரி ரூ.4500-ம், 4 ஆயிரத்து 500 லிட்டர் டிராக்டர் தண்ணீருக்கு ரூ.800-ம் செலவாகிறது. ஓர் ஏக்கரில் உள்ள ரோஜா செடிகளை உயிர்ப்புடன் வைத்திருக்க தினசரி, ரூ.14 ஆயிரம் வரை கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஏற்கெனவே கரோனா, பருவநிலை மாற்றம், நோய் தாக்குதல் உள்ளிட்டவையால் மலர் விவசாயிகள் தொடர் இழப்பு சந்தித்து வரும் நிலையில், தற்போது தண்ணீர் பற்றாக்குறை யால் மேலும் கூடுதல் சுமை ஏற்பட் டுள்ளது. மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார்’’.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்