இணையவழியில் தேர்வு எழுதினாலும் - பல்கலைக்கழக உத்தரவை காரணம் காட்டி கல்லூரிக்கு வர விரும்பும் மாணவர்கள் :

By செய்திப்பிரிவு

இணையவழி தேர்வு எழுதினாலும், அந்த விடைத்தாள்களை மாணவர்கள் மறுநாளே கல்லூரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும் என்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில், செஞ்சி சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் கல்லூரிக்குச் செல்ல போக்குவரத்து கழகம் தடம் எண் 3 என்ற நகரப் பேருந்தை இயக்கி வந்தது. தேர்தல் முடிந்து நேற்று காலை கல்லூரி செல்ல வந்த மாணவர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்து இயக்கப்படவில்லை. இதையறிந்த மாணவர்கள் பேருந்து நிலையம் எதிரே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் மாணவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலை மறியலை கைவிடச் செய்தனர்.

கரோனா தொற்று அதிகரித்து வருவதால் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இணைய வழி முறையில் வாரத்தில் 6 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவர்கள் கல்லூரிக்கு ஏன் வருகிறார்கள் என கல்லூரி முதல்வர் கணேசனிடம் கேட்டபோது, “இணைய வழியிலான தேர்வுகள் நடந்து வருகிறது. வாட்ஸ் அப்பில் கேள்விகள் அனுப்பப்பட்டு தேர்வுகள் நடைபெறுகின்றன. இணைய வழியில் தேர்வு எழுதினாலும், அதன் விடைத்தாள்களை மாணவர்கள் மறுநாள் கிடைக்கும் வகையில் நேரடியாக அல்லது அஞ்சல், கூரியர் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் மின் அஞ்சல் மூலமும் விடைத்தாள்களை உடனுக்குடன் அனுப்பலாம் என்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தால் அறிவுறுத் தப்பட்டுள்ளது.

இதில், நேரில் கொடுக்க விரும்பும் மாணவர்கள் இப்படி கல்லூரிக்கு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் மாணவர்கள் ஏதேனும் காரணத்தின் பேரில், கல்லூரிக்கு வர விரும்புகின்றனர்.

அதற்காக பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளவற்றில், ‘நேரில் வந்தும் விடைத்தாள்களைத் தரலாம்’ என்ற விதியைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இரண்டாம் அலையாக கரோனா பரவும் சூழலில் மாணவர்கள், மின் அஞ்சல் மூலமே உடனுக்குடன் விடைத்தாள்களை அனுப்பலாம் என்று பேராசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்