சிவகங்கை தொகுதியில் கூட்டல் குளறுபடியால் பதிவான வாக்குகள் விவரம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் வேட்பாளர்கள் குழப்பம் அடைந்தனர்.
சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் பி.ஆர்.செந்தில்நாதன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் குணசேகரன், அமமுக சார்பில் அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் போட்டியிடுகின்றனர். நேற்றுமுன்தினம் வாக்குப்பதிவு முடிந்து அன்று இரவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கும் இறுதி வாக்குப்பதிவு விவரம் வெளியிடப்பட்டது.
காரைக்குடி தொகுதியில் 66.22%, திருப்பத்தூர் தொகுதியில் 72.01%, சிவகங்கை தொகுதியில் 65.60%, மானாமதுரை (தனி) தொகுதியில் 71.87% வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்ட பிறகு வேட்பாளர்களுக்கு இறுதி வாக்குப்பதிவு விவரம் வழங்கப்படும்.
அதன்படி காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை தொகுதிகளுக்குரிய இறுதி வாக்குப்பதிவு விவரம் வெளியிடப்பட்டது. அதில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வாக்குகள் சதவீதத்தில் மாறுபாடு இல்லை. ஆனால், சிவகங்கை தொகுதியில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்குகளின் கூட்டல் எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டதால் இறுதி வாக்கு விவரங்கள் நேற்றிரவு 8 மணி வரை வெளியிடவில்லை. மேலும் வேட்பாளர்களுக்கும் வழங்கவில்லை. இந்தத் தாமதத்தால் வேட்பாளர்கள் குழப்பமடைந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago