காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு விதிமுறைகளைக் கண்டுகொள்ளாமல், சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக காத்திருந்து வாக்களித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்த்தில் 4 தொகுதிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தொகுதிகள் என மொத்தம் 22 தொகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
இந்த தேர்தலில், கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, வாக்களிக்கும் அனைவருக்கும் கையுறை, கைகளைக் கழுவ கிருமிநாசினி வழங்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும், வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டுமென்றும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு கையுறைகள் வழங்கப்பட்டன. கிருமிநாசினி திரவம் கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே, வாக்குச்சாவடிக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், 3 அடி இடைவெளிவிட்டு நின்று, பொதுமக்கள் வாக்களிக்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் இந்த உத்தரவு கடைபிடிக்கப்படவில்லை. சில இடங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்று, வாக்களித்தனர். மேலும், வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட கையுறைகளை, பின்னர் அதற்குரிய பக்கெட்டுகளில் போடவேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வாக்காளர்கள் பலர் கையுறைகளை பல்வேறு இடங்களில் வீசிச் சென்றனர்.
சில வாக்குச்சாவடிகளில் முகக்கவசம் தீர்ந்துபோனதால், முகக்கவசம் இல்லாமலேயே பலர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ``சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது, கரோனா பரவலைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தபோதிலும், சில வாக்குச்சாவடிகளில் அவை முறையாகக் கடைபிடிக்கப்படவில்லை. கரோனா தடுப்பு விதிகளைக் கடைபிடிப்பதில் அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்தியிருக் வேண்டும்'' என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago