திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் - மின்னணு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு தாமதம் :

By செய்திப்பிரிவு

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக, வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.

திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட தொழுதாவூர், பிஞ்சிவாக்கம், லட்சுமிபுரம், பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட காக்களூர், கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட காயலார்மேடு, சூரப்பூண்டி, பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூர், காலஞ்சி, மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர், நல்லூர், பாடியநல்லூர், திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட சுப்ரமணிய சுவாமி அரசு கலை, அறிவியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகின. இதனால், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவில்லை. இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது நீக்கப்பட்டன. சில இடங்களில் புதிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

திருத்தணி அதிமுக வேட்பாளர் கோ.அரி, அமுதாபுரம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்தபோது திடீரென வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. இதையடுத்து அங்கிருந்து திரும்பிச்சென்ற வேட்பாளர் கோ.அரி, இயந்திரத்தில் பழுது நீக்கிய பிறகு மீண்டும் வாக்குச்சாவடிக்கு வந்து, தனது வாக்கை பதிவு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் அருகேயுள்ள நடுவீரப்பட்டு, காஞ்சிபுரம் விவேகானந்தா பள்ளி, பெரும்புதூர் அருகேயுள்ள சோகண்டி ஆகிய 3 வாக்குப்பதிவு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள்வரை வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் இயந்திரங்கள் சரி செய்யப்பட்டு, மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் தொகுதியில் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் கருவிகளில் பழுது ஏற்பட்டதால், வாக்குப்பதிவு 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது.

செய்யூர் (தனி) தொகுதியில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, பல இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாகத் தொடங்கியது. எனினும், பிற்பகல் வரை வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றதால், வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களித்தனர். மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட பழம்புத்தூர் ஊராட்சி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால், சுமார் 2 மணி நேரம் வாக்குப்பதிவு காலதாமதமானது.

பூந்தமல்லி சட்டப்பேரவைக்கு உட்பட்ட திருவள்ளூர் ஒன்றியம், தொட்டிக்கலை கிராமத்தில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஒரு வேட்பாளருக்கு பட்டனை அழுத்தினால், அனைத்து வேட்பாளர்களின் பட்டனும் எரியத் தொடங்கியது.

எனவே, மாற்று வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்