மூன்று மாவட்டங்களில் - அசம்பாவிதங்களைத் தவிர்க்க 8,836 போலீஸார் பாதுகாப்பு :

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 8,836 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 13,15,329 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள் உட்பட பல்வேறு இடங்களில் 997 காவலர்கள், 124 ஆயுதப்படை காவலர்கள், 235 எல்லை பாதுகாப்பு படையினர், 2 ஏடிஎஸ்பிக்கள், 7 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 14 காவல் ஆய்வாளர்கள், 14 உதவி ஆய்வாளர்கள், 76 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் உட்பட 1,857 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

இவர்களை தவிர, தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

வாக்குப் பதிவு அலுவலர்களாக 8,984 பேரும், இதர தேர்தல் பணிகளில் 2,100 பேரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்களிக்க வரும் அனைவரையும் கரோனா பாதிப்பிலிருந்து காக்க கையுறைகள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. கரோனா நோயாளிகள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், செங்கல்பட்டு காவல் மாவட்ட எல்லையில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒரு எஸ்பி, 4 ஏடிஎஸ்பிக்கள், 14 டிஎஸ்பிக்கள், 32 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2,600 போலீஸார், 480 துணை ராணுவத்தினர், வெளி மாநில போலீஸார் 175 பேர், முன்னாள் ராணுவத்தினர் 120 பேர், முன்னாள் போலீஸார் 30 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின்கீழ் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி(தனி), திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி(தனி), ஆவடி மற்றும் மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளில் 35,11,557 வாக்காளர்கள் எவ்வித அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக வாக்குச் சாவடிகள் உட்பட பல்வேறு இடங்களில் 2,800 சென்னை மாநகர போலீஸார், 1,268 ஊரகப் பகுதி காவலர்கள், 7 கம்பெனி துணை ராணுவ படையினர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 136 போலீஸார் மற்றும் 754 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்