திருப்பத்தூர் மாவட்டத்தில் 820 வாக்குச்சாவடிகளில் வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளன என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டன. இப்பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், தேர்தல் காவல் பார்வையாளர் அவினாஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் நாளை (இன்று) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. 4 தொகுதிகளிலும் மொத்தம் 1,371 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்தலில் 13 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள் ளனர். வாக்குச்சாவடி மையங்களில் மட்டும் 6,032 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு வட்டத்திலும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று (நேற்று) வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதன்படி, வாணியம்பாடி தொகுதிக்கு 1,338 இயந்திரங்கள், ஆம்பூர் தொகுதிக்கு 1,240 இயந்திரங்கள், ஜோலார்பேட்டை தொகுதிக்கு 1,258 இயந்திரங்கள், திருப்பத்தூர் தொகுதிக்கு 1,240 இயந்திரங்கள் என மொத்தம் 5,076 இயந்திரங்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் இருந்து சுமார் 500 வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன.
தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 4 தொகுதிகளிலும், மத்திய பாதுகாப்புப் படையினர், காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 2,800 பேர் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட திலிருந்து இன்று (நேற்று) வரை மாவட்டம் முழுவதும் அமைக்கப் பட்ட பறக்கும் படையினர், தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 154 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நுண்பார்வையாளர்கள், கூடுதல் காவலர்கள் கண்காணிப்புப்பணி யில் ஈடுபட உள்ளனர். அதேநேரத்தில் 820 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு அங்கு நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கிராமம் மற்றும்நகர்ப்பகுதிகளில் தலா ஒரு சிறப்பு வாக்குச்சாவடியும், பெண்கள் வாக்குச்சாவடி என 16 சிறப்பு வாக்குச்சாவடிமையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலை நேர்மையுடனும், வெளிப்படை தன்மையுடன் நடத்த தயாராக உள்ளோம். பொதுமக்கள் தங்களது வாக்குகளை 100 சதவீதம் செலுத்த முன்வர வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago