தமிழகத்திலேயே அதிக அளவாக - ஈரோட்டில் 107.96 டிகிரி வெப்பம் பதிவு : கோடையை எதிர்கொள்ள அரசு மருத்துவர் ஆலோசனை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நேற்று ஈரோட்டில் அதிகபட்சமாக 42.2 டிகிரி செல் சியஸ் (107.96 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்தி வருகிறது. தொடர்ச்சியாக 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில், நேற்று தமிழகத்திலேயே அதிக அளவாக 42.2 டிகிரி செல்சியஸ் (107.96 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் ஈரோட்டில் பதிவாகியுள்ளது.

நேற்று காலை 9 மணி முதல் வெயில் அதிகரித்து இருந்ததால், நகரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருந்தது. பகல் நேரங்களில் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடின. தர்பூசணி, குளிர்பானங்கள், இளநீர், பழரசம் விற்பனைக் கடைகளில் நேற்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

ஈரோட்டில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப உணவு பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டுமென பவானி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் எஸ்.கண்ணுசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

கோடைகாலத்தில் அதிக வியர்வை தொடர்ந்து வெளியேறுவதால், உடலின் நீர் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதனால், அதிக தாகம், தலைவலி, சிறுநீர் கடுத்து வெளியேறுதல், சிறுநீரகக் கல் உற்பத்தி, சிறுநீரகப் பாதையில் தொற்று, கண் எரிச்சல், வியர்குரு, உடல் எரிச்சல், வேனல் கட்டிகள் ஏற்படுகிறது. அதிக அளவில் நீர் அருந்துவதால், குடலின் வெப்பநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனைச் சமப்படுத்த நீர் மோர் குடிக்கலாம்.

குளிர்ந்த நீர், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானம், புரோட்டா, துரித உணவுகள் இவற்றை தவிர்க்க வேண்டும்.

மசாலா உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இறுக்கமான ஆடைகளை தவிர்த்து, காற்றோட்டமுள்ள பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 4 லிட்டர் நீர் குடிக்க வேண்டும். நீர்சத்துள்ள காய்கறி களான பீர்க் கங்காய், புடலங்காய், சுரைக்காய், வெண்பூசணி ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.

நன்னாரி குளிர்பானம் குடிக் கலாம். தர்பூசணி, மாதுளை சாறு உள்ளிட்ட பழச்சாறுகளை குடிக்கலாம்.

குழந்தைகளைப் பொறுத்த வரை இருவேளை குளிக்க வேண்டும். தினமும் 3 லிட்டர் வரை குடிநீர் எடுக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்