தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் நேற்று அவர் சொந்த ஊரான கவரப்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும், அவரது ஆதரவாளர்கள் தொகுதி முழுவதும் வாகனங்களில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக கூட்டணிக் கட்சியான பாமக வேட்பாளர் எம்.பிரகாஷ், கூட்டணிக் கட்சிப் பிரமுகர்களுடன் வாக்கு சேகரித்தார். தேமுதிக வேட்பாளர் கே.எம்.டில்லி, இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் வி.சரவணன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் எஸ்.நாகராஜ் ஆகியோரும் நேற்று தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி(தனி) தொகுதி அதிமுக வேட்பாளரான தற்போதைய எம்எல்ஏ ப.பலராமன் நேற்று பொன்னேரி பகுதியில் நிறைவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் துரை.சந்திரசேகர் மீஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக மீஞ்சூரில் வாக்குசேகரித்தார்.
அமமுக வேட்பாளர் பொன்.ராஜா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஏ.மகேஸ்வரி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டி.தேசிங்குராஜன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஜெ.பவானி இளவேனில் உள்ளிட்டோரும் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.
திருத்தணி தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான கோ.அரி நேற்று ஆர்.கே.பேட்டையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருத்தணியில் அவர் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். திமுக வேட்பாளர் எஸ்.சந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சியினர் பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி பகுதிகளில் நேற்று பேரணியாகச் சென்று, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இறுதியில் திருத்தணியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
அதேபோல, தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எல்.அகிலா, இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் எம்.டி.தணிகைமலை உள்ளிட்டோரும் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் தொகுதியில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா நேற்று கே.கே.சத்திரம், பேரம்பாக்கம் பகுதிகளில், திரைப்பட நடிகர் குண்டு கல்யாணத்துடன் சென்று வாக்கு சேகரித்தார். திருவள்ளூர் பஜார் பகுதியில் அவர் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
திமுக வேட்பாளரான தற்போதைய எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் நேற்று பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிளேஸ்பாளையம், அல்லிக்குழி பகுதிகளில் வாக்கு சேகரித்தார். திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் தேவாலயங்களில் வாக்கு சேகரித்த அவர், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் அருகே பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இதேபோல, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெ.பசுபதி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் டி. தாஸ் உள்ளிட்டோரும் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஆவடி தொகுதியில் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான க.பாண்டியராஜன் நேற்று பட்டாபிராம், திருமுல்லைவாயல் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பின்னர், ஆவடி- சிடிஹெச் சாலை, காமராஜர் நகரில் கூட்டணிக் கட்சியினருடன் பேரணியாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாண்டியராஜன், ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே நிறைவு செய்தார்.
திமுக வேட்பாளர் சா.மு.நாசர் ஆவடி, பட்டாபிராம் பகுதிகளில் கூட்டணிக் கட்சிப் பிரமுகர்கள், குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார். ஆவடி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் அவர் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இதேபோல, தேமுதிக வேட்பாளர் நா.மு.சங்கர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜி.விஜயலட்சுமி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வி.உதயகுமார் உள்ளிட்டோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago