திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இறுதி நாளான நேற்று தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி அங்குள்ள அதிமுக தேர்தல் அலுவலகத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வாக்கு சேகரித்தார். சங்கரநாராயண சுவாமி கோயில் அருகில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
இதேபோல், அங்கு திமுக வேட்பாளர் ராஜா, வாசுதேவநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அ.மனோகரன் எம்எல்ஏ, திமுக வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமார், கடையநல்லூர் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முஹம்மது அபூபக்கர், அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி, அமமுக வேட்பாளர் அய்யாத்துரை பாண்டியன், தென்காசி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், காங்கிரஸ் வேட்பாளர் பழனி, ஆலங்குளம் தொகுதியில் திமுக வேட்பாளர் பூங்கோதை, அதிமுக வேட்பாளர் பால் மனோஜ் பாண்டியன், தேமுதிக வேட்பாளர் நடிகர் ராஜேந்திரநாதன், பனங்காட்டுப் படை கட்சி வேட்பாளர் ஹரி ஆகியோரும் தீவிர பிரச்சாரம் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலும் வேட்பாளர்கள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல் வகாப், அதிமுக வேட்பாளர் ஜெரால்டு, எஸ்டிபிஐ வேட்பாளர் முபாரக், நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் கணேசராஜா, காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், ராதாபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவு, அம்பாசமுத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் ஆவுடையப்பன், அதிமுக வேட்பாளர் இசக்கிசுப்பையா ஆகியோரும் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.
அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மாலையில் மேளதாளத்துடன் வீதி வீதியாகச் சென்று ஆதரவு திரட்டினர். சாலையெங்கும் தேர்தல் பிரச்சாரத்தால் ஒலிபெருக்கிகள் அலறின. மாலை 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago