பெண்களை இழிவாக பேசும் திமுகவினர், நல்லவர்கள் போல் தங்களை சித்தரித்துக் கொள்கின்றனர் என சமத்துவ மக்கள் கட்சி துணை பொதுச் செயலாளர் ராதிகா சரத்குமார் தெரிவித் துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் நேற்று காலை ராதிகா சரத்குமார் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகம் முழுவதும் எங்களது கூட்டணிக்கு நல்ல எழுச்சி உள்ளது. மவுன புரட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சரியான தலைமை இல்லாமல் அதிமுக உள்ளது. அதனால், பாஜகவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகின்றனர். அது நிறைய பேருக்கு பிடிக்கவில்லை.
கலை துறையினருக்கு கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை. பெப்சி தொழிலாளர்களுக்கு கட்டிடம் கட்டுவதாக சொன்னார்கள். அது, எந்த நிலையில் உள்ளது என தெரியவில்லை. தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். கடந்தமுறை, எனது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. தகவல் கிடைத்தால், சோதனை நடத்து கிறோம் என வருமான வரித்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
பெண்கள் மீதான திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா விமர்சனம் என்பது வருந்தத்தக்கது. நல்லவர் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு, தங்களை நல்லவர்கள் என சித்தரித்துக் கொள்கின்றனர். திமுக தலைமை வலுவாக இல்லை. யாரையும் கட்டுப்படுத்த கூடிய தன்மை இல்லாததால், அனைவரும் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப பேசுகின்றனர்.
கூட்டணி பேச்சாளர்கள், நகைச்சுவை பேச்சாளர்கள் என அனைவரும் பெண்களை இழிவாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது. இது ஆரோக்கியமான சூழல் கிடையாது. இவர்கள் ஆட்சிக்கு வருவோம் என சொல்கிறார்கள். கருத்து கணிப்பு என்பது கருத்து திணிப்புதான்.
பெண்களின் பாதுகாப்புக்க அதிமுக ஆட்சியில் ஓரளவு பாதுகாப்பு உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை கண்டிப்புடன் இருந்தார்கள். தமிழகத்தில் பாஜக மீது மக்களக்கு பற்று அல்லது பிடிப்பு இல்லை” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago