விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ததாக சாத்தூர், வில்லிபுத்தூர் அதிமுக வேட்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாத்தூர் மேலகாந்தி நகரில் வாக்காளர்களுக்கு சிலர் பணம் பட்டுவாடா செய்வதாக கிராம நிர்வாக அலுவலர் தர்மசுந்தர் கொடுத்த புகாரின்பேரில், சாத்தூர் நகர் போலீஸார் சோதனை நடத்தி 8-வது வார்டு அதிமுக செயலர் தங்கராஜ்(44), அதிமுக உறுப்பினர் குணசேகரன்(47) ஆகியோரைப் பிடித்தனர்.
விசாரணையில், சாத்தூர் அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் வாக்காளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கப் பணம் கொடுத்ததாகக் கூறியுள்ளனர். அதையடுத்து சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் ரவிச்சந்திரன் மீதும் சாத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதேபோல் கிருஷ்ணன் கோவில் கிருஷ்ணா நகர் பகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அலுவலர் முகைதீன் ஆரிப் ரகுமான் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்துக்கிடமாகக் கையில் ரூ.57 ஆயிரம் மற்றும் வாக்காளர் பெயர் பட்டியலுடன் இருந்தவர்களைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது வில்லிபுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மான்ராஜுக்கு ஆதரவாக வாக்களிக்க வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகக் கூறி யுள்ளனர்.
இது தொடர்பாக, வில்லிபுத்தூர் அதிமுக வேட்பாளர் மான்ராஜ், கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன்(60), முனியாண்டி(63), மாரீஸ்வரன்(27) ஆகியோர் மீது கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago