வேப்பனப்பள்ளி தொகுதியில் பிற மாநில தலைவர்கள் பிரச்சாரம் மூலம் - கன்னடம், தெலுங்கு மொழி பேசும் வாக்காளர்களை கவர்ந்த வேட்பாளர்கள் :

By எஸ்.கே.ரமேஷ்

வேப்பனப்பள்ளி தொகுதியில் பிற மாநில தலைவர்களின் பிரச்சாரம் மூலம் கன்னடம், தெலுங்கு மொழி பேசும் வாக்காளர்களை அதிமுக, திமுக வேட்பாளர்கள் கவர்ந்துள்ளனர்.

கர்நாடக, ஆந்திர மாநில எல்லையை ஒட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். தற்போது, தளி, ஓசூர் தொகுதிகள் கர்நாடக மாநில எல்லையையும், வேப்பனப்பள்ளி தொகுதி ஆந்திரா, கர்நாடகா என 2 மாநில எல்லைகளையும் கொண்டுள்ளது. இத்தொகுதிகளில் கன்னடம், தெலுங்கு பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். இங்கு வசிக்கும் சிலருக்கு தங்களது தாய்மொழியை தவிர பிறமொழிகள் பேசவும், எழுதவும், புரிந்து கொள்ளவும் சிரமமான நிலை காணப்படுகிறது.

இதனால் 3 தொகுதிகளிலும் தமிழகத் தலைவர்கள் தவிர, பிற மாநிலத் தலைவர்கள், தேசிய தலைவர்கள் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

வேப்பனப்பள்ளி தொகுதியில் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் தொகுதி மக்களிடம் கன்னடம், தெலுங்கு மொழியில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

மேலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளைச் சேர்ந்த பிரபலங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியும் வருகின்றனர். அவ்வாறு பிரச்சாரத்திற்கு வருபவர்கள் கன்னடம், தெலுங்கு மொழிகளில் பேசி வாக்குகள் சேகரிப்பில் ஈடுபடுவது, வாக்காளர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக, கர்நாடக எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சிவக்குமார் மற்றும் செயல் தலைவர் ராமலிங்க ரெட்டி ஆகியோர் திமுக வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டனர். இதே போல், கே.பி.முனுசாமிக்கு ஆதரவாக கர்நாடக மாநில பாஜக அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. பிற மாநிலத் தலைவர்கள் பிரச்சாரம் மூலம் கன்னடம், தெலுங்கு மொழி பேசும் வாக்காளர்களை அதிமுக, திமுக வேட்பாளர்கள் கவர்ந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்