அவிநாசி அருகே இறைச்சி கடை அமைக்க எதிர்ப்பு : கொட்டகை அமைத்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

By செய்திப்பிரிவு

அவிநாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் ஆண்டுதோறும் ஊராட்சி நிர்வாகம் மூலமாக பல லட்சம் ரூபாய் மதிப்பில் 10-க்கும் மேற்பட்ட கோழி இறைச்சி கடைகள் ஏலம் விடப்பட்டு செயல்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதையடுத்து, கருவலூர் அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கோழி இறைச்சி கடைகள் அமைக்கப்பட்டது. அம்மன் நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கோழிக்கடையை உடனடியாக அகற்றக் கோரி, அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை அருகே பொதுமக்கள் நேற்று கொட்டகை அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "அம்மன் நகர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இப்பகுதியில் கோழி இறைச்சி கடை அமைக்கக்கூடாது என ஏற்கெனவே கருவலூர் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்திருந்தோம். மனுவை பெற்றுகொண்ட ஊராட்சி நிர்வாகத்தினரும், அம்மன் நகர் பகுதியில் இறைச்சி கடை அமைக்கமாட்டோம். தற்காலிகமாக மார்ச் மாத இறுதி வரை மட்டுமே கடை செயல்படும் எனக் கூறினர். ஆனால், ஏப்ரல் முதல் தொடங்கியும் கடையை அகற்றவில்லை. எனவே, உடனடியாக கோழி இறைச்சி கடையை அகற்ற வேண்டும்" என்றனர்.

அவிநாசி போலீஸார் சென்று இறைச்சி கடை உரிமையாளர்கள், ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சுகாதாரமான முறையிலும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் இறைச்சி கடைகளை நடத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டதையடுத்து அனைவரும் கலைந்துசென்றனர்.

இறைச்சி கடை உரிமை யாளர்கள் கூறும்போது, "இறைச்சி கடைகளுக்கு அடிப்படை வசதிகளுடன் இடம் ஒதுக்கீடு செய்யக் கோரிய வழக்கில், அடிப்படை வசதிகளுடன் இறைச்சி கடை அமைக்க இடஒதுக்கீடு செய்து தர வேண்டுமென ஊராட்சி நிர்வாகத்தினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், இதுவரை இடம் ஒதுக்கப்படவில்லை. எனவே, ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்