கரோனா தொற்று பரவலைத் தடுக்க - பாதுகாப்பு நடவடிக்கைகளை 100 சதவீதம் பின்பற்ற அறிவுறுத்தல் :

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவலைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை 100 சதவீதம் பின்பற்ற வேண்டும், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தைகள், வணிக வளாகங்கள், கடைகள், திருமண மண்டபங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் தொற்று பரவாமல் இருக்க சுகாதாரத் துறையினர், உள்ளாட்சி நிர்வாகத்தினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத் தியுள்ளனர்.

இதன்படி உள்அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மொத்த இருக்கைகளில் 50 விழுக்காடு இடங்களுக்கு மிகாமலும், அதிகபட்சமாக 600 நபர்களுக்கு மிகாமல் நிலையான வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இதனை உறுதி செய்யத் தவறினாலோ அல்லது மீறினாலோ நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் உள்அரங்கு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டங்களுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்துபவர்கள் உறுதி செய்யவேண்டும். முகக்கவசம் அணிவதை அக்கூட்டத்திற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு அளிக்கும் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். தொழிற்சாலைகள், அலுவலகங்கள், நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் கரோனா நோய்த்தொற்று தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை 100 சதவீதம் கட்டாயம் பின்பற்றவேண்டும்.

மேலும், தங்களிடம் பணிபுரிவோர்களில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பணியாளர்களையும் ஊக்கு வித்து அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். பொதுப் போக்குவரத்துகளில் பயணம் செய்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். உணவுக் கூடங்கள், திரையரங்குகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மற்றும் அதனை நடத்துபவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தளர்வின்றி பின்பற்றவேண்டும். இதில் ஏதேனும் விதி மீறல்கள் காணப்பட்டால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்