ராணிப்பேட்டை காவல் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று முன்தினம்வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேர்மையாகவும், வாக்காளர் அச்சமின்றி 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒவ்வொரு மாவட்டந்தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ராணிப் பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
அப்போது அவர் பேசும்போது, "சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் தங்களது வாக்கினை நேர்மையுடன் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்டம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.
விலை மதிப்பில்லாத வாக்குகளை யாரும் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. நமது வாக்குரிமை, நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதால் அனைவரும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குச்சாவடிக்கு வருகை வந்து தங்களது வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டும். மாவட்ட காவல் துறை சார்பில் நேர்மையான வாக்குப்பதிவு 100 சதவீதம் வாக்குப்பதிவு என்பதை வலியுறுத்தி குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உணவக உரிமையாளர்கள் தங்களது உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வாடிக்கையாளர்களின் பார்வையில் தெரியும் படி தேர்தல் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் இளம்பகவத், மகளிர் திட்ட இயக்குநர் ஜெயராமன், ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago