வேலூர் மாவட்டத்தில் - 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்கும் நோக்கில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது.

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த முன்களப் பணியாளர்கள், சட்டப்பேரவைத் தேர்தலில் பணியாற்ற உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், கரோனா இரண்டாம் அலை அச்சத்தால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் இதுவரை சுமார் 68 ஆயிரம்பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, வேலூர் மாவட்டத் தில் 10 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பணி நேற்று முதல் தொடங்கியது. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனை, சத்துவாச் சாரி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், குடியாத்தம் அரசு மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பம் உள்ளவர்கள் ஆதார் நகலை சமர்ப்பித்து இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்